சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உட்பட உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகள்: 26 மாதங்களுக்கு பிறகு கொலிஜியம் பரிந்துரை; பட்டியலில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண் நீதிபதிகள் உட்பட உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34.  இந்த முழு எண்ணிக்கையும் நிரப்பப்படாமல் இருந்தது. சமீபத்தில், மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றதை அடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக குறைந்தது. விரைவில் நீதிபதி நவீன் சின்ஹாவும் ஓய்வு பெற உள்ளார்.

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க, ‘கொலிஜியம்’ தான் பரிந்துரை செய்ய வேண்டும். கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் கொலிஜியம் கூடியது. அதன்பிறகு, கூடவில்லை. இதனால், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு, 26 மாதங்களுக்கு பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் லலித், கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட கொலிஜியம் சமீபத்தில் கூடியது.

இதில், ஒன்பது புதிய நீதிபதிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜித்தேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி மற்றும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த 9 பேர் பட்டியலில் நாகரத்னா, பெலா  திரிவேதி, ஹிமா கோலி ஆகிய 3 பேர் பெண் நீதிபதிகள் ஆவர். இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 9 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்  மொத்த எண்ணிக்கை 34 ஆக உயரும். அதே நேரம், நீதிபதி நவீன் சின்ஹா ஓய்வு பெற உள்ளதால், நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக குறையும். கொலிஜியத்தின் பரிந்துரையில், ஒரே நேரத்தில் 3 பெண்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும்படி கூறப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.

* முதல் பெண் தலைமை நீதிபதி?

கொலிஜியம் பரிந்துரை செய்த 9 நீதிபதிகளில் மூன்று பெண் நீதிபதிகள் உள்ளவர். இவர்களில், நீதிபதி நாகரத்னா எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இந்திரா பானர்ஜி மட்டுமே உள்ளார். அவரும் செப்டம்பர் 2022ல் ஓய்வு பெற உள்ளார். இதுவரை எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தலைமை நீதிபதி வருத்தம்

ஓய்வுபெறும் நீதிபதி நவின் சின்ஹாவிற்கு பிரியாவிடை வழங்கும் விழாவில் தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், ‘‘நீதிபதிகள் நியமன செயல்முறை புனிதமானது. அதனுடன் கண்ணியம் இணைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் அதன் புனிதத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களில் சில யூகங்கள் மற்றும் அறிக்கைகள் குறித்து எனது கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். எனது ஊடக நண்பர்கள் இந்த செயல்முறையின் புனிதத்தை புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஊடக சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை உயர் மரியாதையுடன் வைத்திருக்கிறது. இது போன்ற பொறுப்பற்ற அறிக்கை மற்றும் ஊகங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது. நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,’’ என்றார்.

Related Stories: