பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேசிய பிரதமர், தாயின் தியாகம்தான் உங்கள் வெற்றிக்கு காரணம் என்று கூறி பாராட்டினார். பிரேசிலில் 2016ல் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தினார். சேலம் , பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் பங்கேற்று வருகிறார். அவர் டோக்கியோவில்  இம்மாதம் 24ம் தேதி தொடங்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இந்திய பாரா ஒலிம்பிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாரியப்பன், தொடக்க விழா அணிவகுப்பின்போது தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் பிரதமர் மோடி நேற்று காணொலியில் கலந்துரையாடினார். அப்போது தமிழக வீரர் மாரியப்பன் தாய் சரோஜா பேசும்போது, ‘என் மகன் இந்த முறையும் தங்கம் வெல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தமிழில் தெரிவித்தார். கூடவே அவர்களது சகோதரர்கள் கோபி, குமார் ஆகியோர், ‘எங்கள் சகோதரனால், எங்கள் ஊருக்கும், சேலத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை. இந்தியாவுக்கும் பெருமை கிடைத்துள்ளது’ என்று கூறினர். அதற்கு இந்தியில் பதிலளித்த மோடி, ‘தாயாகிய உங்கள் தியாகத்தால்தான் உங்கள் மகனால் சாதிக்க முடிந்தது’ என்று தெரிவித்தார். இரண்டு தரப்பிலும் மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தனர். டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் தலைமையில் இந்தியா சார்பில் 14 வீராங்கனைகள் உட்பட 54 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள்  46 வகையான ஆட்டங்களில் விளையாடுவார்கள்.

Related Stories: