நேஷனல் பாங்க் ஓபன்: மெட்வடேவ், கமிலா ஜியார்ஜி சாம்பியன்

டொரன்டோ: டொரன்டோவில் நடந்த நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையரில் டேனில் மெட்வடேவும், மகளிர் ஒற்றையரில் கமிலா ஜியார்ஜியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பைனலில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், அமெரிக்காவின் இளம் வீரர் ரெய்லி ஒபெல்காவும் மோதினர். ஏடிபி தரவரிசையில் டேனில் மெட்வடேவ் 2ம் இடத்திலும், ஒபெல்கா 23ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் 6-4, 6-3 என நேர் செட்களில் மெட்வடேவ், எளிதாக ஒபெல்காவை வீழ்த்தி, நேஷனல் பாங்க் ஓபன் கோப்பையை கைப்பற்றினார். ரோஜர்ஸ் கோப்பை என்ற பெயரில் நடந்து வந்த இப்போட்டி, இந்த ஆண்டு முதல் நேஷனல் பாங்க் ஓபன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரோஜர்ஸ் கோப்பையை கடந்த 2000ம் ஆண்டில் ரஷ்ய வீரர் மார்ட்டின் சஃபின் வென்றார். அதன் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வடேவ், இந்த கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு பின்னர் மெட்வடேவ் கூறுகையில், ‘‘உண்மையில் இந்த வெற்றி எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்துள்ளது. நோவாக், ரஃபேல் வரிசையில் நானும் இணைந்துள்ளேன். கடைசியாக நான் ஆடிய 5 பைனல்களில் 4 போட்டிகளில் வென்றுள்ளேன். இப்போட்டியில் ஒரு சில தருணங்களில் ஒபெல்கா, திறமையாக ஆடினார் என்பதை சொல்லியே ஆக வேண்டும். நெருக்கடியான நேரங்களில் குறிப்பாக பிரேக் பாயின்ட்டுகளின் போது, அவரது ஆட்டம் நன்றாக இருந்தது.

கடுமையாக போராடினார். டென்னிசில் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார். மகளிர் ஒற்றையர் பைனலில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், இத்தாலி வீராங்கனை கமிலா ஜியார்ஜியும் மோதினர். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பிளிஸ்கோவா 6ம் இடத்திலும், கமிலா ஜியார்ஜி 71ம் இடத்திலும் உள்ளனர். ஆனால் கடந்த மாதம் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் பிளிஸ்கோவாவை 6-4, 6-2 என நேர் செட்களில் கமிலா ஜியார்ஜி வீழ்த்தினார்.

அதனால் இப்போட்டியில் இருவரது மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதிலும் கமிலா ஜியார்ஜி 6-3, 7-5 என நேர் செட்களில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி, நேஷனல் பாங்க் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது ஜியார்ஜியின் முதல் டபிள்யூடிஏ கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: