டிஎன்பிஎல் டி20 பைனல் திருச்சிக்கு 184 ரன் இலக்கு

சென்னை: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 பைனலில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 184 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி - நாராயண் ஜெகதீசன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 58 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். கவுஷிக் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் 3, சசிதேவ் 12, ராஜகோபால் சதீஷ் 11 ரன்னில் வெலியேறினர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் 90 ரன் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். ஹரிஷ் குமார் 13 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. சோனு யாதவ் 17 ரன்னுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். திருச்சி பந்துவீச்சில் ரகில் ஷா, பொய்யாமொழி தலா 2, தாஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களமிறங்கியது.

Related Stories: