தமிழ்நாடு, கேரளாவில் வெட்டியவை பாதாள கிடங்கில் பதுக்கிய 4 டன் சந்தன கட்டைகள்

திருமலை: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், அமராபுரம் அருகே பாசவன்ன பள்ளியில் யுனைடட் ஆயில் இன்டஸ்ட்ரி என்ற பெயரில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக அமராபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்டிருந்த ரகசிய கிடங்கில் 188 சாக்கு பைகளில் 4 டன் எடையுள்ள சந்தனக் கட்டைகள், 16 கிலோ சந்தன எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தனக்கட்டைகள், சந்தன எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த கிருஷ்ணன், தொழிற்சாலையின் உரிமையாளர் அப்துல் ரகுமான், பங்குதாரர் கேரளாவை சேர்ந்த முகமது குட்டி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்துல் ரகுமான், முகமது குட்டியை தேடி வருகின்றனர்.

Related Stories: