தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருப்பதை வரவேற்கிறேன். இம்முயற்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வரையும் பாராட்டுகிறேன். தமிழகத்தில் புரட்சிகரமாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய வளர்ச்சிக்காக 34 ஆயிரத்து 220 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும்,, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றும் நோக்கத்துடன் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் சாகுபடி பரப்பை அதிகரிக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயத்தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமக தலைவர் சரத்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: