நாளை சுதந்திர தினவிழா விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு-பஸ், ரயில் நிலையங்களில் சோதனை

விழுப்புரம் : சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில், பஸ் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுதந்திர தின விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் வரவழைத்து கவுரவிக்காமல் அவர்களது வீட்டிற்கே சென்று கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை கொண்டு எளிமையான முறையில் நடத்தவும், குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை கொண்டு அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்பி நாதா தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை செய்யப்படுகிறது.  சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் மக்கள் கூடும் இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: