இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக கொரோனா மாறும்: அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக கொரோனா மாறும் என்று அமெரிக்க-நார்வே குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகின் 135க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 2வது அலைக்கு வித்திட்டுள்ளது. கொரோனா 3வது அலை செப்டம்பர் மாதம் இருக்கும், அக்டோபர் மாதம் உச்சம் தொடும், இந்த அலையின்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கியதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும், இதன் உச்சம் செப்டம்பரில் இருக்கும் என்றும் சமீபத்தில் கான்பூர், ஐதராபாத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று, இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக மாறும் என்று அமெரிக்க-நார்வே கூட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தீவிரம் பொதுவாக குழந்தைகளிடையே குறைவாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மற்ற பொதுவான குளிர் காய்ச்சல் வைரஸ்களைப் போல கொரோனா மாறும். இது இன்னும் தடுப்பூசி போடப்படாத அல்லது வைரஸால்  பாதிக்கப்படாத சிறு குழந்தைகளை பாதிக்கும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பு சக்தி அல்லது வைரசின் வெளிப்பாடால், தொற்றுநோய்க்கான ஆபத்து இளைய குழந்தைகளுக்கு மாறக்கூடும். வயதானவர்கள் புதிய தொற்றுநோய்களிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்கப்படுவதால், இளம் வயதினருக்கு அதிக நோய்த்தொற்று விகிதம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:

* கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரத்து 706 ஆகும்.

* ஒரே நாளில் 490 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 987 ஆகும். 140 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் எண்ணிக்கை குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

* இதுவரை 52.36 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: