அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியில் 40% எங்கே போனது என்றே தெரியவில்லை!: அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் பேட்டி..!!

மதுரை: சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கான நிதியில் 40 சதவீதம் எங்கே போனது என்றே தெரியவில்லை என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாளை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆட்சியின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் சில விஷயங்கள் எப்படி நடந்ததென புரியவில்லை. சுமார் 400 அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 30 - 40 சதவீத நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். பொருளாதாரம் பற்றி தெரியாத மாஃபா பாண்டியராஜன் அதை பற்றி பேசக்கூடாது என்றும் பி.டி.ஆர்.தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை திட்டம் 2023 என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் அதை பிறகு தாம் விளக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: