பெரியபாளையம் அருகே மண்பாண்ட உற்பத்தி நிலையம்: கலெக்டர் திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே பெருமுடிவாக்கம் கிராமத்தில் இந்திய எண்ணெய் கழகத்தின் சமுதாய பணி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள மண்பாண்ட உற்பத்தி நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் வளர்ச்சி கழக தலைவர் சேம.நாராயணன் தலைமை தாங்கினார்.  இந்திய எண்ணெய் கழக தென்மண்டல நிர்வாக இயக்குனர் சாவந்த், சிஎஸ்டி இயக்குனர் பகவதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பாலலட்சுமி வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் மண்பாண்ட பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து பேசியதாவது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வருமானத்தை பெருக்கும் விதமாக புது யுக்திகள், தொழில்நுட்பம், அணுகுமுறை ஆகியவை கையாளப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் தரமான மண்பாண்டங்களை தயார் செய்யலாம்.

இங்கு, 82 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், சந்தை வருமானத்தை பெருக்கக்கூடிய வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவை பயன்படுத்தலாம். இப்பயிற்சி பெற்றால் பெண்களுக்கு ₹200 முதல் ₹300 வரை வருமானம் உயர வாய்ப்புள்ளது. அனைவரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மண் பாண்டங்களை பயன்படுத்துங்கள். அரசு சார்பாக இத்திட்டங்களை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார். தொடர்ந்து, பயிற்சி பெற்ற 82 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இறுதியில், ஊராட்சி துணை தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.

Related Stories: