தமிழக அரசின் சமரசமற்ற போராட்டத்தின் காரணமாகவே ஓபிசி இடஒதுக்கீடு சாத்தியமானது: நாடாளுமன்றத்தில் ஜோதிமணி பேச்சு; முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் நாடாளுமன்ற பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பட்டியலை மாநிலங்களே முடிவு செய்துகொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த மசோதா குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் உரிமைகளை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சில வரலாற்று உண்மைகளை நாம் மறந்து விடக்கூடாது. பாஜவையும் நரேந்திர மோடியையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் காக்க வந்த ரட்சகர்களை போல நீங்கள் பறை சாற்றுகிறீர்கள். மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், விளக்குமாற்றோடு வீதியில் வேலை செய்ய வேண்டியவர்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று அதிகாரத்தை அலங்கரித்துவிடுவார்கள் என்று அவதூறு செய்தது யார்?.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக வி.பி.சிங் அரசை கவிழ்த்தது யார், அப்போது அப்படிச் செய்துவிட்டு இப்போது சமூகநீதி குறித்துப் பேசலாமா, தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை நாங்கள் காலங்காலமாக நிலை நிறுத்தி வருகிறோம். பொய்களையும் பாஜவையும் பிரிக்க முடியாது. ஆனால், இதை பிரதமர் மோடியின் சாதனையைப் போல வழக்கம் போலச் சித்தரித்து நீங்கள் பறைசாற்றுகிறீர்கள். 50 சதவீத உச்ச வரம்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்னரே வேறுவழியின்றி ஒப்புக் கொண்டீர்கள். தமிழ்நாடு அரசின் சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே ஓபிசி இட ஒதுக்கீடு இன்று சாத்தியமாகியுள்ளது.

அதிலும் கூட 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றும் தமிழ்நாட்டிற்கு 23 சதவீத அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளிலும் ஒன்றிய அரசு தெளிவான பதிலைக் கூறாமல் 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு தீர்ப்பையே காரணம் காட்டி வருகிறது. பொருளாதாரத்தில் பின்பற்றியவர்களுக்கு 10 இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசே இந்த உச்ச வரம்பை மீறியுள்ள போது, மாநில அரசுகள் ஏன் 50 சதவீதத்தை விடக் கூடுதலாக இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது. 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வர வேண்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு தான் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழிகாட்டுகிறது. நாட்டிற்கு ஒருமுறையாவது உண்மையாக இருக்க முயலுங்கள். இல்லையென்றால் சமூக நீதிக்கான சமரசமற்ற போராட்டத்தில் தமிழ்நாடு என்றும் உங்களைப் பணிய வைக்கும்’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் இந்த பேச்சைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே ஜோதிமணி எம்பியின் பேச்சைக் கேட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘சற்று முன்பு தமிழக முதல்வர் இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. நாடாளுமன்றத்தில் நேற்றைய எனது பேச்சை அண்ணன் ஸ்டாலின் பாராட்டினார்கள். அவரது கடினமான பணிச்சுமைக்கும், சிறப்பான அரசு நிர்வாகத்திற்கும் மத்தியில் இந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள்’’ எனப் பதிவிட்டுள்ளார். சமூக நீதிக்கான சமரசமற்ற போராட்டத்தில் தமிழ்நாடு என்றும் உங்களைப் பணிய வைக்கும்.

Related Stories: