மசினகுடி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் கரடி சாவு; வனத்தில் பெண் யானை பலி: வனத்துறையினர் விசாரணை

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் கரடி உயிரிழந்தது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, மங்களப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனங்களில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான் அதிகமாக உள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு இப்பகுதிகளில் விவசாய நிலங்கள், காட்டேஜ்களை சுற்றி மின்வேலி அமைக்க தடை உள்ளது. இந்நிலையில், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று அதிகாலை வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கிய நிலையில் ஆண் கரடி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற உயரதிகாரிகள், இறந்த கரடியை பார்வையிட்டனர். முதல்கட்ட விசாரணையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கரடி இறந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் ராமசாமி (86) என்பவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு கரடி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் கரடியின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது. வடகிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட மங்களப்பட்டி, கலக்கல் மொக்கை அடர்ந்த வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: