நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு: கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு..! 5 மாவட்டங்களில் முகாம் ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து 5 மாவட்டங்களில் நடக்க இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கொரோனா பரவலின் தீவிரம் இன்னும் குறையவில்லை. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டுகிறது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தினமும் சராசரியாக தொற்று சதவீதம் 13க்கு மேல் உள்ளது. நேற்று 98 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 13049 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது.

தொற்று சதவீதம் 13.23 ஆகும். சிகிச்சை பலனின்றி நேற்று 105 பேர் இறந்தனர். இதையடுத்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்ைக 17,852 பேராக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே கேரளா முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரத்து 417 பேருக்கு முதல்  டோசும், 64 லட்சத்து 24 ஆயிரத்து 876 பேருக்கு 2வது டோசும்  செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவருக்கும் வரும் 15ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு முன்னோடியாக இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மாணவர்கள், தொடக்கபள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு 31ம் தேதிக்குள்ளும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் கேரள அரசு தெரிவித்தது.

ஆனால் திடீரென தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு முற்றிலுமாக காலியாகிவிட்டதாக தெரிகிறது. ஆகவே இந்த மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள அரசின் கவனக்குறைவு தான் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். வாரந்தோறும் எவ்வளவு தடுப்பூசி வேண்டும் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம் கேட்கும். இதற்கு கேரள அரசு முறையான கணக்கு விவரங்களை அளிக்காதது தான் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

Related Stories: