சின்சினாட்டி ஓபன் டென்னிசில் விளையாடவில்லை : ஜோகோவிச் ‘டுவீட்’

பெல்கிரேட் (செர்பியா): சின்சினாட்டி ஓபன் டென்னிசில் இந்த ஆண்டு விளையாடவில்லை என்று நோவாக் ஜோகோவிச், டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வரிசையாக வென்றுள்ளார். இந்த ஆண்டு யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் அவர் வென்றால், ஒரே காலண்டர் வருடத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று, சாதனை படைப்பார். இந்த சாதனையை கடந்த 1969ம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ராட் லேவர் எட்டியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் எதிர்பாராதவிதமாக அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவிடம் ஜோகோவிச் தோல்வியடைந்தார். அதன் பின்னர் நாடு திரும்பிய அவர், சின்சினாட்டி டென்னிசில் பங்கேற்கவில்லை என்று டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று டுவீட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து, இதே டோக்கியோ ஒலிம்பிக் வரை டென்னிசில் என்னுடைய உழைப்பு அதிகமானது. அதனால் எனக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. முக்கியமாக குடும்பத்தினருடன் செலவு செய்ய எனக்கு நேரம் தேவை. அதனால் சின்சினாட்டி டென்னிசில் (வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி) என்னால் விளையாட முடியாத நிலை. விரைவில் உங்களை எல்லாம் நியூயார்க்கில் (யு.எஸ்.ஓபன்) சந்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள், வரும் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை சின்சினாட்டி நகரில் நடைபெற உள்ளது. கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டு சின்சினாட்டியில் ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.

யு.எஸ். ஓபனில் வாவ்ரிங்கா விலகல்

காயம் காரணமாக இந்த ஆண்டு யு.எஸ்.ஓபனில் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் ஆடவர்  ஒற்றையர் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி, வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே ஆஸி. ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களையும் அதற்கு முன்னதாக வாவ்ரிங்கா வென்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்தை பிடித்த அவர், அதன் பின்னர் டென்னிசில் தொடர்ந்து இறங்குமுகத்தை சந்தித்தார்.

தற்போது ஏடிபி தரவரிசையில் அவர் 31ம் இடத்தில் உள்ளார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் யு.எஸ்.ஓபனில் அவர் தொடர்ந்து காலிறுதியை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் யு.எஸ்.ஓபனில் இவருக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் விளையாடவில்லை என்று நேற்று வாவ்ரிங்கா அறிவித்துள்ளார்.

Related Stories: