சேரன்மகாதேவியில் நடப்பட்ட மரக்கன்றுகள் ஈரம் காய்வதற்குள் மாயமான அவலம் சமூகவிரோதிகளால் பாழாகும் தாமிரபரணி ஆற்றங்கரை-வேலியை தீ வைத்து எரித்தவர்களுக்கு வலை

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான நீர்மருது மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன் கம்பி வேலி அமைத்து காவலாளிகள் மூலம் மரமாகும் வரை பராமரிக்கப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதி தற்போது அடர்ந்த காடுகள் போன்று ரம்யமாக காட்சியளிக்கிறது.

 இத்தகைய சிறப்புமிக்க சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் கடந்த சில மாதங்களாக மர்மநபர்கள் பச்சை மரங்களில் தீ வைத்து சோலைவனமாக உள்ள இடத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 30ல் சேரன்மகாதேவி சப் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆற்றுப்பாலத்தின் வடபுறம் உலக சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் எண்ணத்திலும், மழை வளத்தை அதிகரிக்கும் வகையில் துவங்கப்பட்ட இந்நிகழ்வில் ஆற்றுப்படுகையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை பாதுகாக்க ஜே.சி.பி. மூலம் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டது. முள்வேலி அமைக்கப்பட்ட 4வது நாளே மர்மநபர்கள் இரவில் முள்வேலிக்கு தீவைத்து வேலியை காணாமல் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஆடு, மாடுகள் நுழைந்து தற்போது ஒரு மரக்கன்று கூட இல்லாத நிலை உள்ளது.

இதுபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி சப்&கலெக்டராக ஆகாஷ் பணியிலிருந்த போது இதே இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு ஒவ்வொரு மரக்கன்றை சுற்றியும் முள்வேலி அமைக்கப்பட்டது. அப்போதும் சமூக விரோதிகளின் செயலால் ஒரு மரம் கூட அதில் வளரவில்லை. இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதை சமூகவிரோதிகள் தடுக்கின்றனர். எனவே சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் எஞ்சியுள்ள மரங்களை பாதுகாக்க பென்சிங் வேலி அமைத்து சமூக விரோதிகள் உள்ளே புகாதவாறு பாதுகாப்பு பணியில் ஆட்களை நியமனம் செய்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

பார் ஆக மாறும் ஆற்றுப்படுகை

வெளியூர்வாசிகளின் சொர்க்கப்புரியாகத் திகழும் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள ஆறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதுகாப்பாக குளிக்க ஏதுவான பகுதி என்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இங்கு குடிமகன்களின் ஆட்டம் அதிகரித்துள்ளது. விடுமுறை தினங்களில் கார்களில் படையெடுத்துவரும் குடிமகன்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றுப்படுகையை பார் ஆக மாற்றுகின்றனர்.

மேலும் மது அருந்திவிட்டு உற்சாக குளியல் போடுவது, அரை குறை ஆடையுடன் ஆற்றில் கும்மாளம் அடித்து வருவது பெண்கள் மற்றும் பொதுமக்கள் முகம்சுழிக்க செய்கிறது. மேலும் போதையில் பாட்டில்களை உடைத்து ெசல்வதால் செருப்பு அணியாமல் செல்வோர் கால்களில் கண்ணாடி துகள்கள் குத்தி காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி சாட்டையை சுழற்றி சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: