அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு 300 மீட்டர் தூரம் தானாக நகர்ந்த மின்சார ரயில்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில், 300 மீட்டர் தூரம் மின்சார ரயில் தானாக நகர்ந்து சென்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வட மாநிலம், வட மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகிறது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட மெமூ மற்றும் மின்சார ரயில்கள் நாள்தோறும் சென்று வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து வந்த 8 பெட்டிகள் கொண்ட மெமூ மின்சார ரயில் நேற்று காலை 9.15 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய 6வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.

ரயில் இன்ஜினில் டிரைவர், பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை. இந்த ரயில் நேற்று மாலை 4.10 மணியளவில் திடீரென தானாக நகர்ந்து சென்றது. இதனால் பிளாட்பாரங்களில் நின்றிருந்த பயணிகள் மற்றும் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதைப்பார்த்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். இந்நிலையில் அந்த ரயில் பிளாட்பார முடிவில் மேடாக கொட்டி வைத்திருந்த மண்ணில் சக்கரங்கள் புதைந்தபடி நின்றது. இதில் ரயிலில் இருந்து உயர் மின்னழுத்த கம்பியுடன் உரசி செல்லும் பேண்டா கிளிப் உடைந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

Related Stories: