இந்திய அணிக்கு 209 ரன் இலக்கு: நல்ல மனநிலையுடன் இறங்கி வெற்றி பெறுவோம்..! 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா பேட்டி

நாட்டிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183 ரன், இந்தியா 278 ரன் எடுத்தன. 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று இங்கிலாந்து நிதானமாக ஆடியது. ரோரி பர்ன்ஸ் 18 ரன்னில் சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த ஜாக் க்ராலி 6 ரன்னில் பும்ரா பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சிப்லி 28 ரன் எடுத்து பும்ரா பந்தில் நடையை கட்டினார். ஒருபுறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசினார். டெஸ்ட்டில் இது அவருக்கு 21வது சதமாகும். பேர்ஸ்டோவ் 30, லாரன்ஸ் 25, பட்லர் 17 ரன்னில் அவுட் ஆகினர்.

ஜோரூட் 109 ரன்னில் பும்ரா பந்தில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சாம்கரன் 32 ரன் எடுத்தார். 85.5 ஓவரில் 303 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் பும்ரா 5, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 209 ரன் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 26 ரன்னில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 14 ஓவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா, புஜாரா தலா 12 ரன்னில் களத்தில் உள்ளனர். 9 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 157 ரன் தேவை. இதனால் பரபரப்பான கட்டத்தில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

ஆண்டர்சன், பிராட், ராபின்சன் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டுவதால் இந்தியா வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் பும்ரா கூறுகையில், 5 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாங்கள் நல்ல மனநிலையுடன் களம் இறங்குவோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம், என்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,  இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசினர். வெற்றி இலக்கு குறைவாக இருந்தாலும் நாங்கள் இன்னும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். எங்களிடம் சிறந்த பந்துவீச்சு உள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து வெற்றிபெற போராடுவோம், என்றார்.

Related Stories: