உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக தேர்தலை சந்திக்கும் வகையில் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியினர் தீவிர பணியாற்ற வேண்டும். எந்த வகையில் மக்களிடம் பிரசாரத்தை எடுத்து செல்வது, திமுக அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து செய்துள்ள சாதனைகளை மக்களிடம் வீடு, வீடாக கொண்டு சென்று விளக்க வேண்டும். வெற்றி வியூகங்களை எவ்வாறு வகுப்பது என்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அப்போது அறிவுரை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: