பேரையூரில் மக்களை தேடி மருத்துவ திட்டம்-அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்

பேரையூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். மதுரை சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள நலவாழ்வு மையத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை முதல்வர் துவக்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மக்களைத் தேடி மருத்துவ வாகனத்தையும் இவர்கள் துவக்கி வைத்தனர். பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினர்.

இந்த விழாவில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் சேகர், இணை இயக்குநர் அர்ஜூன்குமார், ஆர்டிஓ ராஜ்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், எம்எல்ஏக்கள் மதுரை பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், மாவட்ட துணைச்செயலாளர் பாலாஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூர்யகலா, பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், சேடபட்டி யூனியன் சேர்மன் ஜெயச்சந்திரன், உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம், வட்டார மருத்துவர் விஸ்வநாத பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களின் இல்லங்களுக்குச்சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் உன்னதமான மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற தொற்றாநோய்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் சிகிச்சைகள் தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இதன்மூலம் தொலைதூர கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வலிநிவாரணம் தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்குச்சென்று வீட்டிலேயே இயன்முறை மருத்துவம் வழங்க வசதியாக பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர் பணியில் இருப்பர். பொது சுகாதாரத்துறையின் மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இக்குழுவில் செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துவார்கள். முதலமைச்சரால் எம்.கல்லுப்பட்டி நலவாழ்வு மையத்தில் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டம், மாவட்டம் முழுக்க அனைத்துப்பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் சேடப்பட்டி வட்டாரத்தில் 4811 நபர்கள் பயன்பெறுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது அலை வருவதையும் முன்கூட்டியே தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அமைச்சர், சிறுநீரக கோளாறுகளுக்கு தொடர்நிலை வயிற்று ஜவ்வு சுத்திகரிப்பு முறையில் சிகிச்சை மேற்கொள்ள போர்ட்டபிள் டயாலிசிஸ் கருவியை வழங்கினார்.

Related Stories: