தாளவாடி மலைப்பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டம்-அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

சத்தியமங்கலம் : தமிழக அரசு சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மலைப்பகுதி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கிவைத்து வீடு தேடி மருத்துவ குழுவினர் செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், முதற்கட்டமாக தாளவாடி மலைப்பகுதியில் 1409 பயனாளிகள் பயன்பெற உள்ளதாகவும், இதில் படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக மருத்துவம், நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை அவர்களது இல்லங்களுக்கு சென்று மருத்துவ குழுவினர் வழங்க உள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவம் சார்ந்த கண்காட்சியினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.  மலை கிராமத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம்,  எம்பி அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், தாளவாடி ஒன்றிய பொறுப்பாளர் சிவண்ணா, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கேசிபி இளங்கோ, சத்தி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தேவராஜ், பவானிசாகர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் காளியப்பன், வக்கீல் பார்த்திபன் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: