மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரத்தழுத்தம், நீரிழிவு நோய் பாதித்த 50 ஆயிரம் பேர் பயன் பெறுவர்-கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம்  மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதித்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பயன் பெறுவர் என கலெக்டர் சந்திரகலா கூறினார். ராமநாதபுரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் முதல்வரின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா ராமநாதபுரம் அருகே வழுதூரில் நடந்தது. கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,கருமாணிக்கம், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் சந்திரகலா பேசியதாவது: ‘‘நீரிழிவு, ரத்தழுத்தம் உள்ளிட்ட நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் வீடுகளுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு திட்டம் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு தேவையான மருந்து,மாத்திரைகள் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. முடக்கு வாதத்தால் பாதித்தோருக்கு வீடுகளுக்கே சென்று பிஸியோதெரபி அளிக்கவும், சிறுநீரகம் பாதித்தோருக்கு நடமாடும் இயந்திரம் மூலம் ரத்தம் சுத்திகரிப்பு இலவசமாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரத்தழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் 50 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம்  மூலம் இவர்கள் சிரமமின்றி மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவர். தொற்றா நோய்கள் மூலம் ஏற்படும் இறப்பு விகிதத்தை முற்றிலும் குறைக்க முடியும். இத்திட்டத்தை  சிறப்பாக செயல்படுத்திடும் விதமாக மாவட்டத்தில் உள்ள 11  ஒன்றியங்களுக்கு தலா ஒரு மருத்துவக் குழு வீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மண்டபம், திருப்புல்லானி, பரமக்குடி, சாயல்குடி வட்டாரங்களில் அம்மருத்துவக் குழு அலுவலர்களுக்கான வாகன சேவை முதற்கட்டமாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், தலா ஒரு பிஸியோதெரபிஸ்ட், செவிலியர், மகளிர் நல தன்னார்வலர் இடம் பெறுவர்.  அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மருத்துவக் குழுக்கள் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பொற்கொடி, ரவிச்சந்திரன், யூனியன் சேர்மன்கள் சுப்புலட்சுமி ஜீவானந்தம், பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, ஒன்றிய கவுன்சிலர் தௌபீக் அலி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் உட்

பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: