புனேவில் இருந்து விமானம் மூலம் 2,52,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது

மீனம்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. அரசு எடுத்த தீவிர நடவடிக்கை, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 2வது அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மற்றும் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது 3வது அலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ வல்லுனர்கள் குழுவினர் எச்சரித்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் உடனே போட்டு கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.  இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவைப்படுகிறது. அவற்றை அனுப்பி வைக்கும்படி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரி வருகிறது.

ஆனால் இம்மாதம் 1ம் தேதிக்கு பிறகு மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவில்லை. இதனால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றிய சுகாதார துறை, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கில் இருந்து தமிழகத்துக்கு 2,52,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த தடுப்பூசிகள், 21 பார்சல்களில் புனேவில் இருந்து நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தது. அவைகளை உடனடியாக கீழே இறக்கி மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து  அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று முதல் சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

Related Stories: