இந்தியாவிலேயே முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கிருஷ்ணகிரி: இந்தியாவிலேயே முதல் முறையாக, ஓசூர் அருகே ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு, மருந்து-மாத்திரைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கிலும், நோயாளிகளின் நலன் கருதியும் ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்னும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5ம்தேதி) தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஓசூருக்கு காரில் சென்ற முதல்வருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர். ஓசூரில் தனியார் விடுதியில் இரவு தங்கும் முதல்வர் இன்று காலை சாமனப்பள்ளி கிராமத்தில், ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்ற திட்டத்தை, தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மருந்துகளை முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து இரண்டாவது பயனாளியின் வீட்டிற்கு சென்று, பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிடுகிறார். அதன் பின்னர், செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்காக 3 புதிய வாகனங்களை தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து, விழா மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக 7 மாவட்டங்களில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குகிறார். பின்னர், மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர், காணொலி காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஓசூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

Related Stories: