திருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு

திண்டுக்கல்: திருவையாறு அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டுள்ளது. பூட்டு என்றாலே பொதுமக்கள் முதல் வியாபாரிகள் வரை அனைத்து தரப்பினருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திண்டுக்கல் பூட்டு தான். திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடும் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாங்காய், மணி, தொட்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. திண்டுக்கல் பூட்டுகள் திருடர்களால் எளிதில் திறக்க முடியாது.

திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்றளவும் திண்டுக்கல் பூட்டுக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்கள் பெரும்பாலானவற்றில் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட பூட்டுக்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருப்பழனம் ஸ்ரீஆபத்ஸகாயேஸ்வரர் கோயிலுக்கு 40 கிலோ எடையுள்ள மெகா சைஸ் தொட்டி பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முருகன் கூறுகையில், ‘‘இந்த பூட்டின் சிறப்பு அம்சம் 10 லீவர் கொண்டதாகும். பூட்டிற்குரிய சாவியை தவிர வேறு எந்த சாவியை போட்டாலும் திறக்க முடியாது. பூட்டின் எடை 40 கிலோ. சாவியின் எடை 2 கிலோ. இந்த பூட்டை தயாரிப்பதற்கு 15 நாட்கள் ஆனது. இந்த பூட்டு முழுக்க, முழுக்க கையால் தயார் செய்யபட்டுள்ளது. எந்த ஒரு மெஷினும் பயன்படுத்தப்படுத்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டின் விலை ரூ.20 ஆயிரம். வெளிமார்க்கெட்டில் இந்த பூட்டு ரூ.30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை செய்யபடுகிறது’’ என்றார்.

Related Stories: