‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு

புதுடெல்லி: காப்பீடு செய்த வாகனம் அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கான இழப்பீட்டை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் பலமடங்கு உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியாக உள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி பலியானோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கி நிவாரண உதவியை வழங்கி வருகின்றன. பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி போன்ற பெயர்களில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாலை விபத்துகளில் பலியாகும் நபர்களுக்கான இழப்பீட்டு தொகை அதிகரிக்க சில கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக சாலை போக்குவரத்து துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்தில் பலியாகும் நபர்களுக்கான இழப்பீடு தொகையை எட்டு மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணம் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்படும்.

இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்த இழப்பீடு தொகையானது பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு விரைவாக கிடைக்க வரைவு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில், அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். புதியவிதிகளின்படி அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாலை விபத்தில் இறந்தால் அவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆனால், தற்போது ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. மோசமான காயங்கள் ஏற்பட்டால் ரூ .50,000 வழங்கப்படும். ஆனால், தற்போது ரூ. 12,500 முதல் வழங்கப்படுகிறது.

சமீபத்திய புள்ளி விபரங்களின்படி ‘ஹிட் அண்ட் ரன்’ (விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓடிவிடுதல்) வழக்குகளில் குறைந்தது 29,354 பேர் பலியாகி உள்ளனர். 67,751 பேர் காயமடைந்தனர். இந்த வழக்குகளில் குற்றவாளியைப் பிடித்து இழப்பீட்டு தொகையை பெறமுடியாது என்பதால், மோட்டார் வாகன விபத்து நிதியில் இருந்து இழப்பீடு உதவி வழங்கப்படுகிறது. இதேபோல், விபத்தில் சிக்கும் வாகனம் காப்பீடு செய்யப்பட்ட வாகனமாக இருந்தால், மூன்றாம் நபர் காப்பீட்டை வழங்கும் நிறுவனம் மூலம் இறப்புகளுக்கு ரூ .5 லட்சம் மற்றும் கடுமையான காயங்களுக்கு ரூ .2.5 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: