ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் திரும்பிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நீர்நிலை இடங்களில் ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதற்கிடையில், மாநிலம் முழுவதும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால், தண்ணீர் செல்ல வழியில்லை. பேரிடர் காலங்களில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதையொட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது.

இதையொட்டி, மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு நீர்நிலை பகுதிகளில், ஏராளமானோர் கட்டிடங்கள், கடைகள் கட்டி இருப்பது தெரிந்தது. இந்நிலையில், தாசில்தார் ராமன் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு நேற்று சென்றனர்.  இதையறிந்ததும், அப்பகுதி மக்கள், அவர்களை முற்றுகையிட்டு சூழ்ந்து கொண்டனர்.

பின்னர், இப்பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு, பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார், நிதிமன்ற உத்தரவு இதை மீறக்கூடாது என அவர்களிடம் எடுத்து கூறினர்.  பின்னர், கிராம மக்கள், போலீசார் மற்றுறும் தாசில்தாரிடம், 15 நாட்களுக்குள் எங்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு நீங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என கேட்டு கொண்டனர். இதைக்கேட்ட, அதிகாரிகள் வீடுகளை இடிக்காமல் திரும்பி சென்றனர்.

Related Stories: