பெகாசஸ், வேளாண் சட்டம் விவகாரத்தால் தொடர் அமளி அமளியால் 8வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்: விவாதமின்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றம் அமளி எம்பி.க்களுக்கு பிர்லா எச்சரிக்கை

புதுடெல்லி: பெகாசஸ், வேளாண் சட்டம் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி 8வது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது. அமளிக்கு இடையே எதிர்க்கட்சிகள் விவாதமின்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட 300 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பெகாசஸ் விவகாரத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடக்கவில்லை என கூறி ஒன்றிய அரசு விவாதம் நடத்த மறுக்கிறது.

இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. கூட்டத்தொடரின் 8வது நாளான நேற்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மைய பகுதி வந்து கூச்சலிட்டதால், அவர்களை இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இருப்பினும், அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் தொடர முடியாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மசோதா மற்றும் உள்நாட்டு கப்பல்கள் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு, எந்தவித விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவுக்கு பிறகு மீண்டும் அவை கூடியதும், தொழிற்சாலைகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு பாஜ, அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி உறுப்பினர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்து, 15 நிமிடம் விவாதம் நடத்தினர். பின்னர், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையை நேற்று முன்தினம் பாஜ எம்பி ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கி நடத்தியபோது, காங்கிரசின் குர்ஜித் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட சில எம்பி.க்கள், அவை அலுவல் காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசி எறிந்தனர். எம்பி.க்கள் கொண்டு வந்திருந்த பதாகைகளும் கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசப்பட்டது. எம்.பி.க்களின் இந்த செயல் மிகவும் காயப்படுத்தியதாக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று மக்களவையில் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், இதுபோல் நடந்து கொள்ளும் எம்பி.க்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட 11 எம்பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories: