சுனாமி பேரலைக்கு பிறகு மணல் திட்டுகளாக மாறிய ஜெகதாப்பட்டினம் கடற்பகுதி

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி தொடங்கி, ஏனாதி வரை சுமார் 32 கி.மீ தூரம் கடற்பகுதி உள்ளது. இதில் கட்டுமாவடி, பிரதாபிராமன்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், மும்பாலை, பட்டங்காடு, மணமேல்குடி, புதுக்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் இருந்து நாட்டுப்படகு, பைபர்கள் படகுகள் மூலமும், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் இருந்து விசைப்படகுகள் மூலமும் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதேபோல கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

ஜெகதாபட்டினம் கடற்கரையை ஒட்டிய கடற்பரப்பு அதிக ஆழம் கொண்டதாக இருந்தது. அதிக ஆழம் காரணமாக இப்பகுதியில் மீன்பிடி இறங்கு தளம் கடற்கரையை ஒட்டியே கட்டப்பட்டது. இதனால் கடலுக்கு சென்று திரும்பும் விசைப்படகுகளை மீனவர்கள் கரையில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளத்தை ஒட்டி நிறுத்தி, இறங்கு தளத்தில் உள்ள கட்டையில் கட்டிவிட்டு சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக கடலுக்குள் இருந்த மணல் முழுதும் அலையால் அடித்து வரப்பட்டு கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தேங்கி, அப்பகுதி மணல் திட்டாய் மாறிப்போனது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் விசைப்படகுகளை கடற்கரை ஓரம் கொண்டு வந்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பிபிறகு தாங்கள் பிடித்து வந்த மீன்கள், தாங்கள் கடலுக்கு கொண்டு சென்ற பொருட்களை வேறு ஒரு சிறிய நாட்டுப்படகு மூலம் கடற்கரைக்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மீனவர்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படுவதோடு, கால விரயமும் ஏற்படுகிறது.

ஜெகதாபட்டினம் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுக்களில் சில நேரங்களில் விசைப்படகுகள் சிக்கிக் கொண்டு, அவற்றை வெளியே எடுக்க பெரிய அளவில் மீனவர்கள் போராட வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் பல முறை ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்திற்கு அருகே சுனாமிக்கு பிறகு ஏற்பட்டுள்ள மணல் திட்டுக்களை அகற்றித் தருமாறு அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிமுக அரசு ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: