அமித்ஷாவிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை...பிரதமர் மோடியிடம் பேசியதை அவரிடம் சொன்னோம் : எடப்பாடி பழனிசாமி

டெல்லி : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் தனித்தனியாக நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றனர். பின்னர் இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, அதிமுகவை சசிகலா கைப்பற்ற முயற்சிப்பது, முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியதை அமித்ஷாவிடம் சொன்னதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை ஓ பன்னீர் செல்வமும் பழனிசாமியும் சந்தித்து பேசியுள்ளனர். தொடர்ந்து விமானத்திற்கு நேரம் ஆனதால் மெட்ரோ ரயில் மூலம் டெல்லி விமான நிலையம் சென்ற பன்னீர் செல்வம் அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.

Related Stories: