கல்வராயன்மலையில் பரபரப்பு 2,700 கிலோ வெல்லம், 2,500 லிட்டர் ஊறல் பறிமுதல்-சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம்

சின்னசேலம் : கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தலைமை காவலர்கள் மோகன், ராஜதுரை உள்ளிட்டோர் கல்வராயன்மலையில் உள்ள கிணத்தூர் கிழக்கு ஓடைப்பகுதியில் ரெய்டு சென்றனர். அப்போது வனப்பகுதியின் நடுவில் உள்ள புதரில் 90 மூட்டையில் 2,700 கிலோ எடை கொண்ட வெல்ல மூட்டைகள் சாராயம் காய்ச்ச மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் நடந்த தொடர் ரெய்டில் 12 பேரல்களில் இருந்த 2,500 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்து போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து தப்பியோடிய சாராய வியாபாரிகள் கிணத்தூர் வெங்கடேசன், சோத்தூர் குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் 1,000 லிட்டர் சாராய ஊறலை அழித்த நிலையில் நேற்றும் 2,500 லிட்டர் சாராய ஊறல், 2,700 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்ததையடுத்து காவல் துறை உயரதிகாரிகள் அவரை பாராட்டினர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில், மலையில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தொடர்ந்து சாராய ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சாராயம் காய்ச்சுபவர்களின் வழக்கு விபரம் குறித்து தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்படுவதுடன், அவரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: