பழநி மலைக்கோயிலில் செல்போனில் மூலவரை படம் பிடிக்கும் பக்தர்கள்: தடை விதிக்க கோயில் நிர்வாகம் திட்டம்?

பழநி: பழநி மலைக்கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி  தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலின் மூலவர் சிலை அரியவகை  நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில்  இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழநி  கோயிலில் உள்ள மூலவருக்கு நாள்தோறும் 6 கால பூஜைகள் நடக்கிறது.

தற்போது பழநி கோயிலில் செல்போன் மற்றும் கேமிராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆர்வமிகுதியால் தரிசனத்திற்கு வரும்  பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம் பிடித்து விடுகின்றனர். வாட்ஸ்  அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர். இது ஆகமவிதிகளுக்கு முரணாக அமைந்து விடுகிறது. தவிர, பாதுகாப்பு காரணங்களும் சொல்லப்படுகிறது. எனவே, பழநி கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க  வேண்டுமென ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் எழுச்சி பேரவை நிர்வாகி நாகுஜி கூறுகையில், ‘‘அடிவாரம் மற்றும்  மலைக்கோயிலில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கும்முறையை நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.  கீழே ஒரு கட்டணமும், மலை மீது 3 மடங்கு கட்டணமும்  வசூலிக்க வேண்டும்.  இம்முறையை பயன்படுத்தினால் காலப்போக்கில் பக்தர்களே  கோயிலுக்கு வரும்போது செல்போன்களை தங்களது சொந்த பொறுப்பில்  பத்திரப்படுத்தி விட்டு வந்து விடுவார்கள். இவ்வழிமுறை  நடைமுறைப்படுத்தப்பட்டால் பக்தர்களின் அவசர தொடர்புக்கு வசதியாக  மலைக்கோயிலில் போன் பூத்கள் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: