விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 36,000 கனஅடி நீர் தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று படிப்படியாக அதிகரித்து பிற்பகலில் விநாடிக்கு 32,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 19,665 கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 30,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் 72.57 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 74.00 அடியானது. ஒரே நாளில் 1.43 அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 35.57 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒகேனக்கல்லில் ஐவர் பாணியை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. மெயின் அருவி, சினி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: