செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ராகுல் ஆவேசம் பிரதமர் மோடி, அமித்ஷா செய்தது தேசத் துரோகம்: உச்ச நீதிமன்றம் தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக தனது எல்லா செல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள ராகுல் காந்தி, இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேசத் துரோகம் செய்திருப்பதாக கூறி உள்ளார். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள், 40 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. நாட்டையே உலுக்கி உள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டி வருமாறு:

பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதனை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் இந்திய மாநிலங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பிரச்னையை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும், நாட்டின் அனைத்து அரசியல் அமைப்பிற்கு எதிராகவும் இதை  பயன்படுத்தி உள்ளனர். இதற்கு சரியான ஒரே வார்த்தை தேசத் துரோகம். இந்த மென்பொருள் ஆயுதத்தை மோடி நாட்டிற்கு எதிராக பயன்படுத்தி உள்ளார்.

இதை தேசத் துரோகம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மோடி மீது உச்ச நீதிமன்றம் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பெகாசசை பயன்படுத்தும் அதிகாரம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் மட்டுமே இருப்பதால் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும், ஜாக்கிரதையாக இருக்குமாறும் எனது நண்பர்கள் மூலமாக உளவுத்துறையில் உள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் திறந்த புத்தகம். எனது போன் ஒட்டு கேட்கப்படவில்லை என பாசாங்கு செய்ய மாட்டேன். எனது ஒவ்வொரு போனும் 3, 4 முறை ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மோடியை பார்த்து சிரிக்கலாம்

ராகுல் மேலும் கூறுகையில், ‘‘ஊழல் செய்தவர்கள்தான் மோடியை  பார்த்து பயப்பட வேண்டும். ஊழல் செய்யாவிட்டால், பயப்பட தேவையில்லை. அவரைப்  பார்த்து சிரிக்கலாம். ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்தது உண்மை. இது  தொடர்பான விசாரணை பிரான்சில் நடக்கிறது. எனவே, ரபேல் ஊழலுக்கு பிரதமர் பொறுப்பேற்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்,’’ என்றார்.

விசாரிக்க முடியாது

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் கூறுகையில், ‘‘உளவு மென்பொருள் தொடர்பாக நாங்கள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தி விட்டோம். இதில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை. அரசியலில் தோல்வி அடைந்தவர்கள், வேறு பிரச்னை எதுவும் கிடைக்காமல் இவ்விவகாரத்தை பெரிதாக்குகின்றனர்,’’ என்றார்.

செல்போனை விசாரணைக்கு ஒப்படையுங்கள்

பாஜ தகவல் தொடர்பாளர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், ‘‘யாருடைய செல்போனையும் மோடி அரசு ஒட்டு கேட்கவில்லை. தனது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி நம்பினால், விசாரணைக்காக அவர் தனது செல்போன்களை விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: