குமரி சோதனை சாவடிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை: அதிக பாரம் ஏற்றி சென்ற 11 டிப்பர் லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை: கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டிப்பர் லாரிகள் ஜல்லி, பாறைப்பொடி, எம்சாண்ட், கற்கள் உள்ளிட்ட கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிக லோடுடன் சென்ற வாகனங்களுக்கு வருவாய் துறை ரூ.40 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2 தினங்களுக்கு முன் மாநில அரசு தரப்பில் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தியும், முறைகேடாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணியளவில் குமரி மாவட்ட கேரளா எல்லை பகுதி சோதனை சாவடிகளான படந்தாலுமூடு, களியக்காவிளை, நெட்டா, பளுகல் உள்ளிட்டப பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இப்பணியில் குழித்துறை வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார், கூடுதல் வருவாய் ஆய்வாளர் குமார், மற்றும் அதிகாரிகள் சிந்துகுமார், சதீஸ், ஜாண்பிரைட் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதில், லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றி வந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அந்தவகையில் 11 டிப்பர் லாரிகளை நேற்று அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கனரக வாகனங்கள் குழித்துறை விஎல்சி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த டாறஸ் லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள பாரம் குறித்து எடை போடவும் அதன்மூலம்  நடவடிக்கை மேற்கொள்ளவும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழித்துறை வந்தனர். 3 லாரிகளில் இருந்த எம்சான்ட் அளவுகளை சோதனையிட்டனர். 15 டன் எடையை ஏற்றிச்செல்ல அனுமதி வாங்கி விட்டு 30 டன் வரை கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து ஒவ்வொரு லாரியும் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

Related Stories: