ஓசூர் அருகே லட்சக்கணக்கில் மோசடி ஏலச்சீட்டு நடத்திய தம்பதி தலைமறைவு-பாதிக்கப்பட்டோர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

ஓசூர் : ஒசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதியினர் பணம் தராமல் தலைமறைவானார்கள். சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பழைய மத்திகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருவதாக ெதரிகிறது. இவர்களிடம் ஓசூர் பகுதிகளிலுள்ள 500க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மாதந்தோறும் ₹2 லட்சம், ₹5 லட்சம் என லட்சக்கணக்கில் ஏலச்சீட்டுக்காக சீட்டுப்பணம் கட்டி வந்துள்ளனர். சுமார் 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏலச்சீட்டு நடத்தி அதில் ஏலம் எடுத்த பணத்தை, கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் பணம் வசூலாகவில்லை என பொதுமக்களிடம் இவர்கள் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் ேநற்று, சீட்டு கட்டிய சிலர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு பணம் கேட்க சென்றனர். ஆனால் ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா வீட்டில் இல்லை. மேலும் வீட்டின் இரு பக்கமும் ேகட் பூட்டி கிடந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் ரவிச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டில் ஒரு நாய் மட்டுமே இருந்தது. வீட்டிலிருந்தவர்கள் எங்கு சென்றனர் என தெரியவில்லை. இதுகுறித்து, மத்திகிரி போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதால், அனைவரும் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

Related Stories: