காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

லக்னோ: மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லூயிஸ் குர்ஷித் நடத்தி வரும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட 71.5 லட்சம் ரூபாய் நிதி முறைகேடாக பயன்பட்டதாக 2012ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்காக மாநில அரசின் கையெழுத்து போலியாக போடப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கயம்கஞ் போலீசார் கடந்த 2017 ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2019 டிசம்பர் 30ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் லூயிஸ் குர்ஷித் மற்றும் அறக்கட்டளை செயலர் அதார் ஃபரூகி ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஃபருக்காபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரவீன்குமார் தியாகி உத்தரவிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அவர்கள் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள்.

Related Stories: