மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் எனக்கூறிய தெலங்கானா ஐபிஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா: விருப்ப ஓய்வு பெறுவதாகவும் அறிவிப்பு

ஐதராபாத்: தெலங்கானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ்.பிரவீன்குமார், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், விருப்ப ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். இவர், கடந்த காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் எனக் கூறியதால், திடீர் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலம் சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம் மற்றும் தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை கல்வி நிறுவன சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ்.பிரவீன்குமார், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அவர் மாநில அரசிடம் விருப்ப ஓய்வு பெற உள்ளதாகவும்  விண்ணப்பித்துள்ளார்.

இவர், ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்ததாகவும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில், ‘கனமான இதயத்துடனும், அதே நேரத்தில் மகிழ்ச்சியுடன் அரசு சேவையில் இருந்து, விருப்ப ஓய்வு பெற விரும்புகிறேன். எனது கோரிக்கையை தெலங்கானா மாநில அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளேன்.

ஐபிஎஸ் அதிகாரியாக வருவதற்கு முன், நான் எதிர்கொண்ட கடினமான சூழலும், பயணமும் எனக்கு நிறைய படிப்பினை கொடுத்தன. ஒன்றிணைந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுப்பணியில் பணியாற்றிய போது, என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காவல் துறை மற்றும் சமூக நலத் துறையில் பணியாற்றிய காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக போலீசாருக்கு  நன்றி செலுத்துகிறேன். எனக்கு எதிராக எண்ணற்ற சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வற்கு எனக்கு தடைகள் இருந்தன. எதிர்கால தலைமுறையினர், சமூகத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.

எனது 26 ஆண்டுகால சேவையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் எதிர்பார்க்கப்பட்ட கடமையை திறம்பட செய்தேன். எனது வாழ்நாள் முழுவதையும் சமூக நீதிக்காக போராடிய தலைவர்களின் வழியில் நின்று, அவர்களின் கனவை நிறைவேற்றப் பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: