கொள்ளிடம் பகுதியில் பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்தும் முறை-வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமத்தில் பருத்தி சாகுபடியை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்குள்ள விவசாயிகளிடம் கூறுகையில், மாவு பூச்சிகள் பருத்தியை அதிகம் தாக்கி சேதத்தை விளைவிக்கிறது. பருத்தியைத்தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் போன்ற பயிர்களிலும் குரோட்டன்ஸ், நாயுருவி போன்ற செடிகளிலும் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப் பயிரினை நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால் அரண் போல் இருந்து காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகள் வயலினுள் வருவது தடுக்கப்படும்.

மக்காச்சோளம், தட்டைபயறு போன்றவற்றினை வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கே பயிரிட்டால் முறையே கிரைசோபா, பொரிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருகி மாவுப்பூச்சிகளின் பல்வேறு பருவங்களைக் கட்டுப்படுத்துகின்றன.காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகளை கண்காணிக்க மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் இரண்டடி உயரக் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தழைச்சத்து உரங்களை இடுவது தவிர்க்க வேண்டும்.மீதைல் பாரத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி வீதம் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி தெளித்தும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றார்.

Related Stories: