மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,804 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது..!

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,804 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 72.61 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி நிரம்பிய நிலையில் உள்ளதால், அணை யின் பாதுகாப்பு கருதி இன்று காலை நிலவரப்படி காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கும், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இன்று காலையும் அதேஅளவில் நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயினருவி, சினிஅருவி, ஐவர்பாணி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 4,181 கனஅடியாகவும், பிற்பகல் 8 ஆயிரம் கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 12,804 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பை விட வரத்து அதிகரித் துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. நேற்று காலை நீர்மட்டம் 71.87 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 72.61 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 34.98 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர துவங்கியுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: