மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்; குமரி கடலோர கிராமங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு: ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கை என உறுதி

கன்னியாகுமரி: குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இன்று காலை முதல் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். குமரியில் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து, மீனவர்களின் குறைகளை கேட்டறியும் வகையில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை வந்தார். தொடர்ந்து சின்னமுட்டம் சென்ற அமைச்சர் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மீன் வளத்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர். சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் நலன் கருதி உடனே செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன உள்ளன? நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார். விசைப்படகு மீன்பிடி சங்கம் சார்பில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து மீனவர்களுக்கு என்னென்ன தேவை? தங்கு தடையின்றி அவர்கள் மீன் பிடிக்க  செய்யப்பட வேண்டிய வசதிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மீனவ கிராமங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளேன். அதன்படி முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்ய உள்ளேன். இன்று சின்னமுட்டத்தில் இருந்து இந்த ஆய்வை தொடங்கி உள்ளேன். மீனவர்களுக்கு உடனடி தேவை என்ன? என்பது தொடர்பாக பட்டியலிட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். சின்னமுட்டத்தில் 3  முக்கிய கோரிக்கைகளை மீனவர்கள் தரப்பில் வைத்து உள்ளனர். படகு நிறுத்த போதுமான இட வசதி இல்லை. எனவே படகு தளம் அமைக்க வேண்டும். துறைமுக சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஏற்கனவே ரூ.40 கோடியில் சின்னமுட்டத்தில் 2 பகுதிகளில் படகு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வெகு விரைவில் தொடங்கும். துறைமுக சாலையை அகலப்படுத்தும் பணி தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்த திட்டத்தை ஒன்றிய அரசு மூலமாக செயல்படுத்துவதா? அல்லது மாநில அரசு செய்யலாமா? என்பது பற்றி முதல்வருடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அம்சங்கள் உள்ளன.

எந்த வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமை மற்றும் மீனவர்களின் உரிமையை ஒன்றிய அரசு பறிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி உள்ளார். எந்த சாகர்மாலா வந்தாலும் மீனவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும். கல்வி, மீன் பிடி உரிமை, உணவு திட்டம் போன்றவற்றில் ஒன்றிய அரசிடம் கைகேயந்தும் வகையில் பல திட்டங்கள் உள்ளன. இதை ஏற்க முடியாது என ஏற்கனவே முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களை கடந்துள்ளது. 55 நாட்களில் கொரோனா தடுப்பு பணிகளில் தான் தீவிரம் காட்டி உள்ளோம். தற்போது ஒவ்வொரு துறையாக முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார்.

பேரிடர் காலங்களில் மீனவர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடும் வகையில் நவீன வசதிகள் கொண்ட ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இது பற்றி முதல்வர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சூறாவளி காற்றால் மீனவர்கள் திசை மாற கூடும். இது போன்ற நிலையில் தற்போதைய  ஒன்றிய அரசு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் கொண்டு வந்துள்ளன. மீனவர்களை பாதிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  சுரேஷ்ராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், புஷ்பலீலா ஆல்பன்,  ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, வக்கீல் மதியழகன், பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், வைகுண்ட பெருமாள், பாபு, புவியூர் காமராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு கன்னியாகுமரி அடுத்த முட்டப்பதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி மூலப்பதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் ஆய்வு பணியை தொடங்கினார்.

Related Stories: