தொடரும் அடை மழை வால்பாறையில் நீர்மின் உற்பத்தி தொடங்கியது

வால்பாறை: வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி அடை மழையாக மாறி உள்ளது. இதனால் நள்ளிரவு மற்றும் அதிகாலை அதிக குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர் மின்சக்தி மற்றும் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் மேல் நீராறு அணை, கீழ் நீராறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. மின் உற்பத்தி கழகம் கட்டுப்பாட்டில் அப்பர் ஆழியாறு, மற்றும் காடம்பாறை அணைகள் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் சுமார் 31 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் தமிழகத்திற்கு பாசனம், மின்சாரம் கிடைக்கிறது.

சோலையார் மின் நிலையங்கள், சர்கார்பதி, ஆழியார் (நவமலை) மின்நிலையம், ஆழியார் புனல் மின் நிலையம், காடம்பாறை உள்ளிட்ட மின் நிலையங்களில் சுமார் 592 மெகாவாட் மின்சாரம் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுகிறது. பருவமழை ஜூன் மாதம் முதல் பெய்யத் துவங்கியது. தொடர்ந்து பெய்து வந்த பருவ மழை சற்று குறைந்தது. இந்நிலையில் மீண்டும்  ஜூலை 9ம் தேதி முதல் அடை மழையாக மாறி, தீவிரம் காட்டத் தொடங்கியது.  தற்போது அடை மழையாக நீடித்து வருகிறது. சோலையர் அணை, கவர்கல் பகுதியில் மூடுபனி தொடர்கிறது. மேலும் அணைகளின் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மழை அளவு மில்லி மீட்டரில் : மேல் நீரார் 88, கீழ் நீராறு 61, வால்பாறை 94, சோலையார் அணை 43.

Related Stories: