கன்வார் யாத்திரை விவகாரம் மத சம்பிரதாயத்தை விட மனித உயிர்கள் முக்கியம்: உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் கன்வார் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், வரும் 25ம் தேதி முதல் இந்த யாத்திரையை தொடங்கலாம் என்று உத்தர பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ெதாடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விளக்கம் கேட்டு உத்தரப் பிரதேச அரசுக்கு கடந்த 14ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப்பிரதேச அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘குறைவான பக்தர்களுடன் ஒரு சம்பிரதாயத்துக்காகத் தான் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது,’ என தெரிவித்தார்.

ஆனால், ‘கொரோனா 3வது அலை காரணமாக, எந்த மாநிலத்திலும் இந்த யாத்திரை நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது,’ என ஒன்றிய அரசு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கன்வார் யாத்திரை நடத்தும் முடிவை உத்தரப் பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு 2 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதில், மத சம்பிரதாயங்களை விட மக்களின் உயிரை முக்கியமானது. இந்த வழக்கில் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என தெரிவித்தனர்.

Related Stories: