மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை

கொல்கத்தா: ‘மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த கொலை, பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதன் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். இங்கு தேர்தலுக்கு பின் பாஜ. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரம், வன்முறை ஏவிவிடப்பட்டது.  இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், `மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக ஆளும் கட்சியினரின் ஆட்சி நடப்பதாக தெரிகிறது. வன்முறையின் போது நடந்த கொலை, பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மம்தா கூறுகையில், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பாகவே வெளியில் கசிந்துள்ளது. இது, சட்ட விரோதமாகும்,’’ என்றார்.

* 25ம் தேதி சோனியாவுடன் சந்திப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா, அடுத்ததாக, 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தனது அரசியல் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், வரும் 25ம் தேதி டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது, நாடாளுமன்ற மழைக்கால தொடரில் பாஜ.வுக்கு எதிராக இணைந்து செயல்படுவது  குறித்தும் அவர் பேச இருப்பதாக தெரிகிறது.

Related Stories: