ஐந்து பெத்தவன் ஆண்டியா? பொய் என நிரூபித்த ராஜஸ்தான் பெண்கள் நிர்வாக சேவை தேர்வில் குடும்பமே சாதனை

ஜெய்ப்பூர்: ‘ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி,’ என்பார்கள். ஏனெனில், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதற்குள் இருக்கும் சொத்தெல்லாம் கரைந்து, அந்த தந்தை நடுத்தெருவுக்கு வந்து விடுவான் என்பதை எடுத்துக் காட்டவே, இந்த பழமொழியை அந்த காலத்தில் உதாரணமாக கூறுவார்கள். ஆனால், நவீன யுகத்தில் இந்த பழமொழிக்கு இடமின்றி மலையேறி போய் விட்டது. இதற்கு உதாரணம் தான், ராஜஸ்தானில் நடந்துள்ள இந்த சம்பவம். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ சகாதேவ் சகரன். ஏழை விவசாயி. இவருக்கு 5 பெண் பிள்ளைகள். நிலத்தில் உழைத்து ஓடாக தேய்ந்து, அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு பெண்களை படிக்க வைத்தார். அந்த பெண்களும் தந்தையின் கஷ்டத்தை புரிந்து படித்தனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

முதல் 2 பெண்களான ரோமா, மஞ்சு ஆகியோர் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று, அம்மாநிலத்தின் உயர் பதவிகளுக்கு சென்றனர். இவர்களின் அடுத்த மூன்று சகோதரிகளான அன்சு, ரீத்து, சுமன் ஆகியோர் கடந்த 2018ல் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவை ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், அன்சு, ரீத்து, சுமன் ஆகிய 3 பேரும் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை 5 சகோதரிகளும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கொண்டாடி வருகின்றனர். இதற்கு ‘லைக்’குகள் குவிகின்றன. இத்தேர்வில் மொத்தம் 2,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் அரசின் பல்வேறு முக்கிய துறைகளில், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

Related Stories: