தொழில்நுட்ப அலுவலர்களால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க கட்டிட, மனை பிரிவுகளுக்கான வரைபட அனுமதி பெறும் நடைமுறையில் மாற்றம்: டிடிசிபி இயக்குனர் அதிரடி உத்தரவு

சென்னை: மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்களால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க கட்டிட, மனை பிரிவுகளுக்கான வரைபட அனுமதி பெறும் நடைமுறையில் மாற்றம் செய்து டிடிசிபி இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து நகர் ஊரமைப்பு இயக்குனர் (டிடிசிபி) இயக்குனர் சரவணவேல்ராஜ் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட அலுவலகத்தில் இருந்து நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் சம்பந்தமான உத்தேசங்கள் அனுப்பப்பட வேண்டிய சரிபார்ப்பு படிவம் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தலைமை அலுவலகத்தில் பெறப்படும் உத்தேசங்கள் முழு வடிவில் சரிபார்ப்பு படிவத்தின்படி இல்லாமல் பெரும்பான்மையாக வரைபடங்கள், ஆவணங்கள் குறைபாட்டு உடன் பெறப்படுகின்றன.

இதனால், தலைமை அலுவலகத்தில் உத்தேசங்களை பரிசீலித்து குறைபாடுகளை சரி செய்வதற்கு தேவையான விவரங்களை மாவட்ட அலுவலகங்களிடம் இருந்து கோரி பெற்று அனுமதி வழங்குவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு இனி வருங்காலங்களில் அனைத்து உத்தேசங்களை முழு வடிவில் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் நேரில் கொண்டு வந்து அதனை தலைமை அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப அலுவலர் சரிபார்த்து அனைத்து விவரங்களும் முழு வடிவில் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே மாவட்ட அலுவலக பணியாளர்கள் திரும்பி செல்ல அனுமதிக்கப்படுவர். எனவே, இனி வருங்காலங்களில் இந்த நடைமுறை தவறாது பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: