நெல்லை மாவட்டத்தில் ஆடி பிறக்கும் முன்னே நகரும் அம்மி சூறைக்காற்றுடன் மல்லுக்கட்டும் மின்வாரியம்-குறைந்த பணியாளர்கள் மூலம் சமாளிப்பு

நெல்லை  : நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் அதனுடன் மல்லுக்கட்டும் நிலைக்கு மின்வாரியத்தினர் ஆளாகி உள்ளனர். குறிப்பாக ஆடி பிறக்கும் முன்பே அம்மியை அசைக்கும் அளவிற்கு சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மின்கம்பிகள் மீது உடைந்து விழும் மரங்கள், மரக்கிளைகளால் ஏற்படும் மின்தடையை போக்கு குறைந்த அளவு பணியாளர்கள் மூலம் மின்வாரியத்தினர் சமாளித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறையில் பராமரிப்பு பணிகள் சீராக நடைபெறவில்லை. குறிப்பாக கடைசி 9 மாதங்கள் மின்துறை பணிகள் முடங்கும் அளவிற்கு ஆட்சி நிர்வாகம் மந்தப்படுத்தியது. மேலும் பணியாளர் பற்றாக்குறை, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதலால் வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் போன்ற சிக்கல்களில் டான்ஜெட்கோ தவிக்கிறது.

திமுக ஆட்சி ஏற்பட்ட பின்னர் கடந்த மாதம் முதல் பராமரிப்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பிரதான சாலைகளில் மின்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது சிறிய சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, மின் மாற்றிகளை சீரமைப்பது போன்ற பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ெசய்யப்படுகிறது.

இந்நிலையில் மின்துறைக்கு மற்றொரு சோதனையாக தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் ஆடி மாதம் பிறக்கும் முன்னதாகவே அம்மியை நகர்த்தும் அளவிற்கு பலமாக காற்று வீசுகிறது. புறநகர் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளை சாய்க்கும் அளவிற்கு காற்றின் வேகம் உள்ளது. பலத்த காற்றால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகள் மீது விழுகின்றன.

இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் மின்தடையை சீரமைக்க மின்துறையில் போதிய பணியாளர்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் மின்பாதைகளை சீரமைத்து வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கம்பியாளர்கள் முதல் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மின்வாரியத்தினரும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: