உலக கோப்பை வென்ற யஷ்பால் சர்மா மரணம்

புதுடெல்லி: கபில்தேவ் தலைமையில் 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் யஷ்பால் ஷர்மா நேற்று காலமானார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர் யஷ்பால் (66). நொய்டாவில் (உ.பி.) வசித்து வந்த இவர் நேற்று காலை  திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார். சிறந்த நடுவரிசை பேட்ஸ்மேனாக முத்திரை பதித்த யஷ்பால், கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடி இருக்கிறார். கோப்பையை வெல்ல யஷ்பால் ரன்குவிப்பும் முக்கிய காரணம். அந்த தொடரில் கபில்தேவுக்கு அடுத்து அதிக ரன் குவித்த இந்திய வீரராக 2வது இடம் பிடித்தார்.

 லார்ட்ஸ் அரங்கில் 1979ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும். தொடர்ந்து சியால்கோட்டில் 1978ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார். 1983ல் டெல்லியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்திலும், 1985ல் சண்டிகரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்திலும் கடைசியாக விளையாடினார். யஷ்பால் சர்மா மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், சச்சின் டெண்டுல்கர் உள்பட பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன், ‘யஷ்பால் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த வீரரான யஷ்பால், தேர்வுக் குழுவில் இருந்தபோது தனது பணிகளை நேர்மையாக செய்தார்’ என்று கூறியுள்ளார்.

* 37 டெஸ்டில் விளையாடி 1606 ரன் எடுத்துள்ளார் (அதிகம் 140, சராசரி 33.45, சதம் 2, அரைசதம் 9). சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் தான் அதிகபட்ச ஸ்கோராக 140 ரன் விளாசினார். அப்போது குண்டப்பா விஸ்வநாத்துடன் இணைந்து நாள் முழுவதும் களத்தில் இருந்ததுடன் 3வது விக்கெட்டுக்கு  316 ரன் சேர்த்து சாதனை படைத்தனர்.

* 42 ஒருநாள் போட்டியில் விளையாடி 883 ரன் எடுத்துள்ளார் (அதிகம் 89 ரன், சராசரி 28.48, அரை சதம் 4). இவர் 89 ரன் விளாசியது, 1983 உலக கோப்பை தொடரில் அப்போதைய நடப்பு சாம்பியன் வெ.இண்டீசுக்கு தோல்வியை தந்தது. அந்த போட்டியின் ஆட்டநாயகனும் இவரே.

Related Stories: