ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறிஸ் கேல் அதிரடி வெஸ்ட் இண்டீஸ் ஹாட்ரிக் வெற்றி: டி20 தொடரை கைப்பற்றி சாதனை

செயின்ட்  லூசியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல்  2 ஆட்டங்களை 18 ரன், 56 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை வகிக்க, 3வது ஆட்டம் நேற்று நடந்தது.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 33 (29 பந்து, 2 சிக்சர்), கேப்டன் பிஞ்ச் 30 (31 பந்து, 2 பவுண்டரி), ஆஸ்டன் டர்னர் 24 (22 பந்து, 2 பவுண்டரி), மேத்யூ வேடு 23 ரன் (16 பந்து, 4 பவுண்டரி) அடித்தனர். வெ.இண்டீஸ்  தரப்பில் ஹேடன் வால்ஷ் 2, பிராவோ, மெக்காய், ஆலன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

142 ரன் இலக்குடன் களமிறங்கிய வெ.இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிளெட்சர் (4), சிம்மன்ஸ் (15) சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்பிறகு ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கேல், கேப்டன் நிகோலஸ் பூரன் இணைந்து ஆஸி. பந்து வீச்சை பதம் பார்த்தனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 67 ரன் சேர்த்தனர். கேல் 38 பந்தில் 4 பவுண்டரி, 7 இமாலய சிக்சருடன் 67 ரன் விளாசி (11வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்) ஆட்டமிழந்தார். பிராவோ 7 ரன்னில்  வெளியேறினார். வெ.இண்டீஸ் 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. பூரன்  32* (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ரஸ்ஸல் 7* (2 பந்து, 1 சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்க்ஆமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெரிடித் 3, ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர்.

வெ.இண்டீஸ் 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்கும். ஆஸி.க்கு எதிரான 3வது டி20ல் அதிரடியாக ரன் குவித்த கேல் (41வயது) ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் நேற்று 24 ரன் எடுத்தபோது அனைத்து வகை டி20 போட்டிகளிலும் சேர்த்து 14,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

Related Stories: