மழையால் சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற செய்தி பார்த்தவுடனே வேளாண், உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு: திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தகவல்

சென்னை: எதிர்பாராத மழையின் காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகின்றது  என்று செய்திகளில் பார்த்தவுடனே முதலமைச்சர் வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சரை அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் பேசி  இதற்கு தீர்வுகாண வலியுறுத்தியுள்ளதாக திமுக விவசாய அணி செயலாளர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியும் மாநில திமுக விவசாய அணி செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் வீணாகக் கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் செலவில் பல சேமிப்பு கிடங்குகளை கட்டிப் பயன்படுத்த முடியாத  நிலையில் வைத்ததோடு பெயரளவில் தூர்வாரும் பணி என அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அதிமுகவை போன்றவர்கள் அல்ல நாங்கள் என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக விவசாய பிரிவு செயலாளரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்பாராத மழையின் காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகின்றது என்று தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தவுடனே முதலமைச்சர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரையும், உணவுத்துறை அமைச்சரையும் தலைமை செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை நடத்தி இதற்கு தீர்வுகாண வலியுறுத்தினார். அதன்படி நெல் அதிகம் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களுடன் உடனடியாக கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நெல் மழையில் நனைதல் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் நெல் கொள்முதல், பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தவறு எங்கு நடந்தது என்று குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தும் குறிப்பிட்டு கூறாத போலி விவசாயிக்கும் அதிமுக விவசாய அணி செயலாளருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் இனிமேலாவது அரசியலுக்காக அறிக்கை விடாமல் மக்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related Stories: