100 ஆண்டு பழமைவாய்ந்த சித்தர்காடு கருவாட்டு சந்தை 60 நாட்களுக்கு பிறகு திறப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை : மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பை ஒட்டியுள்ள சித்தர்காடு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கருவாட்டு சந்தை அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த கருவாட்டு சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட கருவாடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வதும், அதனை பல்வேறு மாவட்ட மக்களும், வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்வதும் வழக்கம். கொரோனா இரண்டாவது பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த கருவாட்டு சந்தை கடந்த 80 நாட்களாக மூடப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வு செய்துள்ளதால் நேற்று அதிகாலை சித்தர்காடு கருவாட்டு சந்தை திறக்கப்பட்டது. இதனை அறிந்த மக்கள் கருவாடு வாங்குவதற்காக சித்தர்காடு கருவாடு சந்தைக்கு படையெடுத்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சந்தையில் கொடுவா, நெத்திலி, பால்சுறா, கோலா, வாளைமீன், சென்னகூனி, நெய்மீன், மடவா, மத்திமீன், வஞ்சரை, திருக்கை, இறால் உள்ளிட்ட 40 வகையான கருவாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கொழுப்புச்சத்து இல்லாத உணவு என்பதால் கருவாட்டை மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு திறக்கப்பட்ட கருவாட்டு சந்தையில் கருவாடுகள் அனைத்தும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தையின் கூரைகள் சேதமாகி 5 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது, பலமுறை அரசுக்குக் கோரிக்கை வைத்தும் சென்ற ஆட்சியில் யாரும் செவிமடுத்து கேட்கவில்லை, திமுக அரசிடம் கேட்டால் கிடைக்கும் என்பதால் பாதுகாப்பான, கடை குடிநீர், கழிப்பறை மற்றும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: